Monday, April 25, 2016

இந்திய நாட்டுக் கொடியும் சங்பரிவாரங்களும்

இந்திய நாட்டுக் கொடியும் சங்பரிவாரங்களும்

முத்து.செல்வன்


இன்று நாட்டுக்கொடி மீது பற்றுக் கொண்டவர்கள் போலக் காட்டிக் கொள்ளும் சங் பரிவாரத்தினர்அன்று, இந்தியாவிற்கு நாட்டுக்கொடியாக மூவண்ணக்கொடி பரிந்துரைக்கப்பட்ட போது அதனை ஏற்றுகொள்ள மறுத்த வர்கள் ஆவர்.. சங் பரிவாரங்களின் மூல அமைப்பாகிய இந்து மகா சபை முன்னின்று . எதிர்த்தது.
இந்திய ஒன்றியம்  - யூனியன் என்ற சொல்லை ஏற்றுக் கொள்ள மறுத்தவர் சவார்க்கர். ஏனெனில் யூனியன் என்ற சொல்லை ஏற்றுக் கொண்டால் இந் தியா அதாவது பரத கண்டம் முன் காலத்தில் ஒரே நாடாக இருக்கவில்லை என்பதையும் வெள்ளையரே துண்டு துண்டாக இருந்த பகுதிகளை இந்தியா வாக்கினர் என்பதையும் ஒப்புக் கொள்வது போலாகிவிடும் என்பது சவார்க்கரின் கருத்தாக இருந்தது.
இந்தக் கருத்தின் அடிப்படையில் தான் இந்த நாட்டுக்கு ஒரு நாட்டுக் கொடி உருவாக்கப்பட்ட காலத்தில் சங் அம்முயற்சியை எதிர்த்தது. சவார்க்கரும் கோல்வாக்கரும் அதனை எதிர்த்தனர். எட்கோவர் புகழ்ந்து பேசிய காவிக் கொடியை மனதில் வைத்தே, கோல் வால்கர் நமது நாட்டிற்குத் தேசக்கொடி ஒன்றை உருவாக்கி இருக்கிறார்களாம்.
நாம் எதற்கு மற்றவர்களைப் பார்த்துக் காப்பியடிக்க வேண்டும்? புராதனமான மாபெரும் தேசம் நம்முடையது; பெருமைக்குரிய பழைமையைப் பெற்றி ருப்பவர்கள்  நாம். அப்படியிருக்கும் போது நமக்கெனச் சொந்தமாக ஒரு கொடி கிடையாதா? ஆயிரமாயிர மாண்டு வரலாறுடைய நமக்கென ஒரு தேசியச் சின்னம் கிடையாதா? நிச்சய மாக உண்டு. எனில் நமது சிந்தனையில் ஏன் இந்த வெறுமை? என வினவினார்.
1947 சூலை22 இல் அரசமைப்பு சட்ட அவையால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொடியைக் குறித்து,சவர்க்கர், மக்களால் தேர்ந்தெடுக்கப்படாத ஓர் அவையால் முடிவு செய்யப்பட்ட கொடியை எப்படி நாட்டுக் கொடியாக ஏற்றுக் கொள்ள வியலும்? நிச்சயம் முடியாது.
இந்துஸ் தானத்தின் அதிகாரபூர்வமான கொடி சிந்து நதியில் இருந்து கடல்கள் சூழ்ந்த, பிரிக்கப்படாத, பிரிக்க இயலாத புனித பூமியான, அன்னை பூமியின் தேசியக் கொடியாக, காவிக் கொடியைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது.. அக்கொடியில் நம் இனத்தின் இருப்பை உணர்த்தும் குண்டலினியும், வீர வாளும் பொறிக்கப்பட்டிருக்கும்.
அக் கொடி, ஆணையால் உருவாக்கப்படா மல் தேசத்தில் இருப்பவர்களிடமிருந்து பரிணமிக்கும். அது இந்துக்களின் வரலாற்றைப் பிரதிபலிக்கும்;  அது கோடிக் கணக்கான இந்துக்களால் புனிதமாகக் கருதி வணங்கப்படும். அது இமயமலையில் இருந்து தென்கடல் வரையில் ஏற்கெனவே பறந்து கொண் டிருக்கிறது. பிற கட்சிக் கொடிகள் மரியாதை நிமித்தம் சகித்துக்கொள்ளப் படலாம்.
ஆனால், இந்துக்கள் தேசிய அளவில் இந்தக் காவிக் கொடியைவிட வேறு எந்தக் கொடியையும் விசுவாசத் துடன் வணங்கமாட்டார்கள் என்று அறிக்கை விடுத்தார். (ஏ.ஜி.நூரணி, சவார்க்கரும் இந்துத்துவமும் பக்12)
1947 விடுதலைக்கு முன்னால் ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் ஏடான ஆர்கனைசர் தொடர்ந்து மூவண்ணக் கொடியை எதிர்த்து வந்தது. 1947, சூலை 17 நாளிட்ட இதழில் வெளியான நாட்டுக்கொடி என்னும் தலைப்பிலான ஆசிரியவுரையில் காவிக்கொடிதான் நாட்டுக்கொடியாக அமைதல் வேண் டும் என வலியுறுத்தப்பட்டது.
சூலை13 இதழில் வெளியான இந்துஸ்தான் என்னும் ஆசிரியவுரையிலும், ஆகஸ்டு 14 இல் வெளியான சேரிடம் என்னும் தலைப்பிலான ஆசிரியவுரையிலும் காவிக்கொடிக்கான குரல் உரத்து எழுப்பப்பட்டது.  ஆகஸ்டு 14 இதழில். பக்வா த்வஜ் (காவிக் கொடி) மட்டுமே செங்கோட்டையில் ஏற்றப்பட வேண்டுமென்று எழுதப்பட்டிருந்தது.
மூவண்ணக்கொடியின் தேர்வைக் குறித்து, விதிவசத்தால் ஆட்சியில் அமர்ந்து விட்டவர்களால் மூவண்ணக் கொடி நம் கைகளில் திணிக்கப்பட்டி ருக்கலாம். ஆனால், அதனை இந்துக்கள் ஒருபோதும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்.
மூன்று; என்னும் சொல்லே தீயதாகும். நம் கொடியில் மூன்று வண்ணங்கள் இருப்பது உறுதி யாக உளவியல் அடிப்படையில் தீங்கு விளைவிக்கும்; நாட்டுக்கும் கேடு விளைவிக்கும் என்று மூவண்ணக் கொடி எதிர்ப்புக்கு நியாயம் கற்பிக்கப் பட்டிருந்தது.
1946, சூலை 14 அன்று நாகபுரியில் ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கோல்வால்கர், காவிக்கொடி மட்டுமே நம் பண்பாட்டை உணர்த்துவது; அதுவே கடவுளின் அடையாளம் என்று கூறினார். மேலும் அவர், இறுதியில் நம் நாடு காவிக்கொடியையே வணங்கும் என்று உறுதியாக நம்பு கிறோம் என்றும் கூறினார்.
(M. S. Golwalkar Shri Guruji Samagar Darshan Vol 1, Nagpur Bharatiya Vichar Sadhana 1981 P.98).
விடுதலைக்குப் பின்னர் மூவண்ணக் கொடி நாட்டுக் கொடியாக அறிவிக்கப் பட்ட சூழலில் ஆர்.எஸ்.எஸ். இயக்கம் அதனை ஏற்றுக்கொள்ள மறுத்தது. சிந்தனைக்கொத்து என்னும் தனது நூலில் கோல்வாக்கர், தலைவர்கள் நம் நாட்டுக்கு ஒரு கொடியை உருவாக்கி யுள்ளனர்.
ஏன் அதைச் செய்தார்கள்? பொது நிலையிலிருந்து விலகிச் செல்லுவதும் மற்றவர்களைப் பார்த்து ஒழுகும் போக்குமாகும். நம் நாடும் மிகுந்த பெருமை வாய்ந்த நாடாகும். பல்லாயிரம் ஆண்டுகளாக நமக்கென்று ஒரு கொடி இல்லாமலா இருந்தது? நமக்கென்று ஒரு நாட்டு அடையாளம் இல்லாமலா இருந்தது?
அய்யத்திற் கிடமின்றி இருந்தது. பின் ஏன் நம் மிடம் இந்த வெறுமைப் போக்கு  என்று கேட்டு, நம் கொடி காவிக் கொடியே என்று வலியுறுத்தியுள்ளார். அண்மைக்காலம் வரையிலும் கூட ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தவர் மூவண் ணக்கொடியை ஏற்றுவதில்லை.
காந்தியார் கொலை வழக்கில் அரசுத்தரப்பு சாட்சியாக மாறிய திகம்பர் பாட்ஜே, ஒரு கட்டத்தில் தன் வாக்கு மூலத்தில், எனக்கு நன்றாக நினைவு இருக்கிறது. 15.8.1947. நாடு சுதந்திரத்தைக் கொண்டாடியபோது, சவார்க்கர் தன்னுடைய வீட்டில் இந்து மகாசபா கொடியையும் தேசியக் கொடியையும் அன்றைய தினம் மட்டும் ஏற்றினார்.
நான் எனது வீட்டில் அன்றைய தினம் இந்து மகாசபா கொடியை மட்டுமே ஏற்றினேன். சவார்க்கரைத் தவிர வேறு எந்த இந்து மகாசபா உறுப்பினரும் வீட்டில் தேசியக் கொடியைப் பறக்கவிடவில்லை. நான் பார்த்த அனைத்து இந்து மகாசபாவினர் வீடுகளில் எல்லாம் இந்து மகாசபா கொடி மட்டுமே ஏற்றி வைத்திருந்தனர்.
பம்பாய் மாநில இந்து மகாசபா முடிவின்படி அன்றைய தினம் பாக்வா மட்டுமே ஏற்றப்பட வேண்டும் என முடிவு செய்யப்பட்டிருந்தது உண்மை. செயற்குழு எடுத்த முடிவிற்கு எதிராக சவார்க்கர் மட்டும் தனது வீட்டில் தேசியக் கொடியை ஏற்றியதற்கு இந்து மகாசபாவினர் அனைவரும் வெறுப் பினைத் தெரிவித்தனர்.
நானும் கூட, சவார்க்கர் வீட்டில் தேசியக்கொடி பறக்கவிடப்பட்டதைக் கண்டு வெறுத்தேன். நாதுராம் கோட்சே, கார்க்கரே ஆகியோரும்கூட சவார்க்கர் வீட்டில் தேசியக் கொடி பறக்கவிட் டதைக் கண்டு வெறுப்புற்றனர் என்று கூறியதிலிருந்து இந்து மகா சபாவின ருக்கு மூவண்ணக்கொடி மீது இருந்த வெறுப்புப் புலனாகிறது.
மதச் சார்பின்மை என்னும் பெயரால்,  இந்தியாவில் இனவேறுபாட்டை வளர்ப்பதற்காகவே பேராயக் கட்சி மூவண்ணக்கொடியை அறிமுகப்படுத் தியது என்பதே அவர்கள் கொண்டி ருந்த உறுதிப்பாடாகும். கடந்த ஆண்டு செப்டம்பர் திங்களில் சென்னையில் நடைபெற்ற ஒரு கருத்தரங்கில் பேசிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் அனைத் திந்தியக் கொள்கைப்பரப்பாளர் (ப்ரச்சார் ப்ரமுக்) மன்மோகன் வைத்யா இதனை வலியுறுத்திக் கூறியுள்ளார்.
இந்தியாவில் மதச்சார்பின்மை என்னும் கருத்துரு தேசியவாதிகளை இனநல வாதிகள் என்று முத்திரையிடுவதற்கும் இனநலவாதிகளை மதச்சார்பற்றவர்கள் என்று முத்திரையிடுவதற்குமே பயன் படுகிறது  நாட்டுக்கொடியில் உள்ள மூன்று வண்ணங்கள் இந்தியாவில் உள்ள மதங்களைக் குறிப்பன என்றும் அதனால் அந்தக் கொடி இனவாத சிந்தனைகளை ஊக்குவிக்கின்றது என்றும் கூறியுள்ளார்.
காவி வண்ணத் தில் நீல வண்ணத்தில் அமைந்த சக்கரத்தை உடைய கொடியே நாட்டுக் கொடியாக அமைதல் வேண்டுமென்று 1931இல் காங்கிரசு கூறியதென்றும் அந்தக் கொடியை நாட்டுக்கொடியாக ஏற்றுக் கொண்டிருந்தால் சிறப்பாக இருந்திருக்குமென்றும் அவர் கூறி யுள்ளார்.
அந்தக் கூற்று பொய் என்பதைக் கீழ்க்காணும் பகுதி விளக்கும்.
நாட்டுக் கொடியில் உள்ள வண் ணங்களுள் சிவப்பு இந்துக்களையும், பச்சை இசுலாமியரையும் குறிப்பதற் காகச் சேர்க்கப்பட்டவை என்பது உண்மைதான். 1918 இல் ஆந்திராவைச் சேர்ந்த வெங்கையா என்பவர்தான் முதன் முதலில் மூவண்ணக் கொடி உருவாகக் காரணமானவர். அது காந்திக்கு முழு நிறைவைத் தரவில்லை. நாட்டின் உணர்வுகளைக் காட்டுவதாக அது அமையவில்லை என்று கருதினார்.
மூன்று வண்ணங்களுள் சிவப்பு (காவி) இந்துக்களையும், பச்சை இசுலாமி யரையும், வெள்ளை இந்தியாவின் மற்ற மத நம்பிக்கைகளையும் குறிப்பனவாக அமைதல் வேண்டும் என்று கருத்தறி வித்தார். அப்போது லாலா ஹன்ஸ்ராஜ் என்பவர்தான் கொடியின் நடுவில் மூன்று வண்ணங்களிலும் இடம் பெறும் வகையில் அசோகச் சக்கரம் அல்லது இராட்டை பொறிக்கப் படலாம் என்னும் கருத்தை முன் வைத்தார்.
சிறுபான்மையரைத் தாங்கிக் காப்பாற்றும் பொறுப்பு இந்துக்களுக்கே உரியது என்பதைக் காட்டும் வகையில்,  வெள்ளை நிறம் மேலேயும் பச்சை நிறம் நடுவிலும் சிவப்பு (காவி) நிறம் கீழேயும் அமைய வேண்டும் என்றும் காந்தி கூறினார். அந்தக் கொடியைக் காங்கிர சார் தங்கள் நிகழ்ச்சிகளில் பயன்படுத்தி வந்தனர்.
1929இல் அகமதாபாத்தில் ஒரு கூட்டத்தில் உரையாற்றிய காந்தியார், இன்று இந்தியாவில் இந்துக்களும் இசுலாமியரும் இணைந்து வாழ இயலாது என்று சிலர் கூறுகிறார்கள். இந்த நாட்டு விடுதலை என்பது இந்துக்களுக்கோ இசுலாமியருக்கோ மட்டுமே உரியது என்பது உண்மை யெனின் இந்தக் கொடியைப் பயன் படுத்துவது பொருளற்றதாகிவிடும்.
இந்தக் கொடியை ஏற்றும் ஒவ்வொரு வரும் இந்துக்கள். இசுலாமியர், கிறித்தவர், மற்ற மதத்தவர் அனைவரும் இணைந்து வாழச் சூளுரை மேற் கொள்ள வேண்டும். அந்த அடிப்படை யிலேயே சுயராஜ்யம் அடையப் போராட வேண்டும் என்று கூறினார்.
1931ஆம் ஆண்டு பேராயக்கட்சி கொடியில் சில மாற்றங்களை ஏற்படுத்த முடிவெடுத்தது. அதன்படி காவி நிறம் சிவப்பாக மாற்றப்பட்டு  அது மேலேயும் வெள்ளை நடுவிலும் பச்சை கீழேயும் அசோகச் சக்கரம் நடுவில் வெள்ளை நிறப்பகுதியிலும் அமைக்கப் பட்டது. இந்தக் கொடி நாட்டு ஒற் றுமைக்கும் வன்முறையற்ற போக்கிற் கும் எடுத்துக்காட்டாகவும் மத நல்லிணக்கத்திற்கு வழிவகுப்பதாகவும் உள்ளதாக, காந்தியார் மகிழ்ந்தார்.
இந்திய அரசமைப்புச் சட்டம் உருவக்கப்பட்ட போது காங்கிரசார் பயன்படுத்தும் கொடி ஏற்புடையதா யினும் நாட்டுக் கொடியும் கட்சிக் கொடியும் ஒன்றாக இருத்தல் பொருந் தாது என்று கருத்தறிவிக்கப்பட்டது. அந்த அடிப்படையில் காங்கிரசுக் கட்சியின் கொடியில் அசோக சக்கரத் திற்கு மாறாக இராட்டைச் சின்னம் பயன்படுத்தப்பட்டது. (வரலாற்றாய் வாளர் இராமச்சந்திர குஹா   TRUTHS ABOUT THE TRICOLOUR,    The Hindu, 26/9/2004).
திரு. குஹா அந்தக் கட்டுரையில் கூறியுள்ள ஒரு செய்தி நம் கவனத்தை ஈர்ப்பதாக உள்ளது. காந்தியார் கொல்லப்பட்ட நிகழ்வுக்குப் பின்னர் ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் மூவண்ணக் கொடியை மிதித்தும், அழித்தும் மகிழ்ந்துள்ளனர். அது குறித்துத் தலைமை அமைச்சர் நேரு 1948, பிப்ரவரி 24ஆம் நாளன்று ஆற்றிய உரையில், தன் துயரத்தை வெளிப்படுத்தியுள்ளார்.  சில இடங்களில் நாட்டுக்கொடிக்கு அவமதிப்பை ஏற்படுத்திய ஆர். எஸ்.எஸ். அமைப்பினர் தங்களை நாட் டுத் துரோகிகள் என்று மெய்ப்பித்துள் ளனர் என்று கூறியுள்ளார் என்பதே அந்தச் செய்தி.
வைத்யா கூறியது போலக் காங்கிரசு பரிந்துரைத்தது காவியில் சக்கரம் பொறிக்கப்பட்ட கொடி அல்ல .என்பது மேற்கண்ட செய்தி மூலம் தெளிவாகின் றது. மூவண்ணக்கொடியை  ஆர். எஸ்.எஸ். அமைப்பு ஏற்க முன்வராமைக் குக் காரணம் கொடிக்கு அளிக்கப்பட்ட விளக்கமே என்பதும் தெளிவாகின்றது.
இசுலாமியரை வம்புக்கு இழுப்பதற்கு மட்டுமே சங் பரிவாரத்தினர் நாட்டுக் கொடியைப் பயன்படுத்துகின்றனர். 1991 சிறீ நகரின் லால் சவுக் என்னுமிடத்தில் மூவண்ணக்கொடியை ஏற்றுவதற்காக முரளி மனோகர் ஜோஷி சென்றதையும், 1994 ஆகஸ்டு 15 அன்று ஊப்ளியில் உள்ள ஈட்கா திடலில்  உமாபாரதி அந்தக் கொடியை ஏற்ற முயன்றதையும் எண்ணிப் பார்க்க  வேண்டும். இதில் வேடிக்கை என்னவென்றால், பாபர் மசூதியை இடிக்கச் சென்றவர்கள்  மூவண்ணக்கொடியை ஏந்திச் செல் லாமல் காவிக்கொடிகளையே ஏந்திச் சென்றனர் என்பதுதான் (- ஷிலீணீனீsuறீ
மிsறீணீனீ).
அது போலவே, இசுலாமியர்கள் நடத்தும் மதரசா பள்ளிகள் அனைத்தி லும் குடியரசு நாளன்று நாட்டுக்கொடி ஏற்றப்பட வேண்டுமென்று ஆர். எஸ்.எஸ். கூறியுள்ளது
2002ஆம் ஆண்டு தேசிய ஜனநா யகக் கூட்டணி ஆட்சியில் இருந்த போதுதான் முதன் முதலாக ஆர். எஸ்.எஸ். தலைமையகத்தில் மூவண் ணக்கொடி ஏற்றப்பட்டது.
இந்திய விடுதலைக்காக வெள்ளை யரை எதிர்த்து மத வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைந்து போராடுவதை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் தொடங்கப் பட்ட 1925இலிருந்தே வெறுத்து வந்தது. 1929 டிசம்பர் திங்களில் லாகூரில் கூடிய பேராயக் கட்சிக் கூட்டத்தில் முழுமை யான தன்னிறைவு ஆட்சியே (பூரண சுயராஜ்) குறிக்கோள் என்னும் தீர் மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் 1930, ஜனவரி 30 ஆம் நாளை விடுதலை நாளாகக் கொண்டாடி, அன்றைக்கு பேராயக்கட்சி பயன்படுத்திவந்த மூவண்ணக் கொடியை ஏற்றுவதென் றும் தீர்மானிக்கப்பட்டது.
அதை எதிர்க்கும் வகையில்,  ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தினர் பக்வா ஜண்டா (காவிக் கொடி)வை மட்டுமே நாட்டுக்கொடி யாக ஏற்று வணங்க வேண்டுமென அந்த இயக்கத்தின் அன்றைய தலைவர் (சர்சங்சாலக்) எட்கேவார் அறிக்கை விடுத்தார்.(- Shamsul Islam).
மதநல்லிணக்கத்தை  குறிப்பாக இந்து, இசுலாம் ஒற்றுமையை அடிப் படையாகக் கொண்டு மூவண்ணக் கொடி வடிவமைக்கப்பட்டிருந்ததை ஆர்.எஸ்.எஸ். இயக்கம் விரும்பியதே இல்லை.
“மற்றவர்கள் ஊடுருவலால் நாம் கூண்டுக்குள் அடைபட்ட கிளியைப் போலாகிவிட்டோம்.  நம் பண் பாட்டை அழிக்கவந்தவர்களை நம் உடன்பிறப்புகளாக ஏற்றுக்கொண் டதால் நாம் வலிமை குறைந்தவர்களாகி விட்டோம் என்று கூறியதன் வழி, மற்ற சமயத்தவர் இந்துப் பண்பாட்டை அழிக்கவந்தோர். அவர்களைப் பகைவர் களாகக் கருதாமல் உடன்பிறப்புகளாக ஏற்றுக்கொண்டதே தவறு என்றவர் சவார்கர்.
இந்தியா, பல மொழிகளைப் பேசும் நாடு என்பதையும் பல்வேறு வகையான பண்பாடுகளுக்கு உரியது என்பதையும் மக்கள் மனதிலிருந்து அகற்றி, அவர்கள் மொழிவழித் தேசிய உணர்வைப் பெறாமல் தடுத்து, அவர்களை மதவழித் தேசியத்தில் இணைக்க முற்பட்டவர் எட்கேவர்.  நாட்டுக்கொடியின் மீது இவர்கள் பற்றுக் கொண்டுள்ளதாகக் கூறுவதும் இவர்கள் மட்டுமே நாட்டுப்பற்றுக்குரியவர்கள் என்று கூறுவதும் சங் பரிவார ஆட்சியைக் காப்பாற்றவே என்பது தெளிவு!
http://viduthalai.in/component/content/article/97-essay/117738-2016-02-27-08-14-35.html

No comments:

Post a Comment